இந்தியாவின் நகர்ப்பகுதிகள் போக்குவரத்து சார்ந்த கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நடந்துசெல்பவர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்களைப் புறக்கணிக்கும் வகையில் சாலைப் போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்படுவதால், நகரங்களில் சமத்துவமற்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள், காற்று மாசு உள்ளிட்ட ஆரோக்கியமற்ற சூழலை நகரங்கள் எதிர்கொண்டுள்ளன.
திட்டமிடலின்மை: இந்தியாவில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால், வளர்ந்துவரும் நகரமயமாக்கலுக்கு இணையாக நமது சாலை வசதிகள் திட்டமிடப்படவில்லை. அதன் விளைவாகவே, தேசிய அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகின்றன. பெங்களூரு, லக்னோ, டெல்லி, புணே போன்ற நகரங்களில் சாலைத் திட்டமிடல் பிரச்சினை தீவிரமாகக் காணப்படுகிறது.