புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கிறது. மின் இணைப்பு 12 மணி நேரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேவேளையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் நடந்து வருகின்றன.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மாமல்லபுரம் – புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையெட்டி, புதுவையில் சனிக்கிழமை மாலை முதல் மின் இணைப்புகள் 12 மணி நேரத்துக்கு மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதிவேக காற்றுடன் மழை இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை விட காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், தொடர் மழையால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது.