மதுராந்தகம்: ஃபெஞ்சல் புயல் பாதித்த மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை கரையை கடந்தது. இதனால், மேற்கண்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், நீர் நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மதுராந்தகம் வட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதேபோல், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதிகளிலும் இருளர் மக்கள் குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.