வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயலால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களும் புதுச்சேரி மத்திய ஆட்சிப் பகுதியும் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. எதிர்பார்த்ததைவிடவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த உதவி தேவை.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று, நவம்பர் 29இல் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இது புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பாதிப்பைச் சந்திக்கும் என்றும் ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. எனினும், இந்த மாவட்டங்களில் சில பகுதிகள் மட்டுமே மழை வெள்ளப் பாதிப்பில் சிக்கின.