கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி தன்னுடைய ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? – விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ என்ற நூலில், அண்ணாவின் ‘திராவிட நாடு’ கொள்கையில் முரண்பாடுகள் உள்ளதாக விவரித்துள்ளார். அந்த நூலில் பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ள கருத்தை சுருக்கமாகப் பார்ப்போம்…
திராவிடர் இயக்கத்தின் தத்துவவாதி அண்ணாதுரை ஆவார். அந்தத் தத்துவத்தை விளக்கிய அந்த இயக்கத்தின் அடிப்படை தத்துவார்த்த நூல், அவர் எழுதிய ‘ஆரிய மாயை’ என்ற நூலாகும். இது 1943-ல் பிரசுரமாகி 1977 வரை 14 பதிப்புகள் அச்சிடப்பட்டது. இந்த தத்துவார்த்தத்தை ஆராய்வது, திராவிட இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இன்றியமையாதது.