அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்து எழுந்த சர்ச்சையை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோரின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்மூலம் அதிமுக விவகாரம் மீண்டும் தேர்தல் ஆணையத்தின் கரங்களுக்கு சென்றுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘கட்சியின் நிர்வாகத்தில் நடைபெறும் மாற்றங்களை பதிவு செய்து கொள்ளும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அதன் சட்டப்பூர்வ நிலை குறித்து ஆராயும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. அதற்கு ஆதரவாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன.