சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திடவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் மே தினம். ஓய்வு என்பதும், மகிழ்வு என்பதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற நாள் மே தினம். அந்த வெற்றியைத் தொடர்ந்து, உழைக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்படைய வேண்டும்; உலக முன்னேற்றத்திற்காக தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும் நல்வாழ்வு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள் மே தினமாக, சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.