நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் பணவீக்கம் 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. முந்தைய மாதத்தில் பணவீக்க அளவு 5.49 ஆக இருந்தது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சற்று கவலைக்குரியதாக பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ‘‘தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம், வெள்ளி ஆகிய ஐந்து பொருட்கள்தான் பிரச்சினைக்குரியதாக உள்ளன. இந்த பொருட்களின் தேவை, வரத்து சீராக இருப்பதில்லை என்பதால், இதன் விலை வேறுபாடு பணவீக்கத்தை பாதிக்கிறது’’ என்று தெரிவித்து உள்ளார். இதில் அவர் சொல்ல மறந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். எல்லா பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது பெட்ரோல், டீசல் விலையாகும்.