சென்னை: அனுமதியின்றி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் 90 நாட்கள் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்திருக்கிறார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது.
அதற்கு பிறகு இந்தி திணிக்கப்படுகிறது என்ற ஐயம் ஏற்பட்ட நிலையில், மக்களவையில் மொத்தம் 508 உறுப்பினர்கள் இருந்த போது, இரு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த தி.மு.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களுக்கு, பிரதமர் நேரு 3.8.1960 அன்று இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவரே கையொப்பமிட்டு வழங்கினார். இதற்காக சம்பத் அவர்களை சென்னை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா பாராட்டியதை அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதையொட்டி ஆட்சி மொழிகள் சட்டம், பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரால் திருத்தம் செய்யப்பட்டு பிரதமர் நேருவின் உறுதிமொழிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, இந்தி பேசாத மக்கள் மீது ஒன்றிய அரசு எந்த வகையிலும் இந்தியை திணிக்க முடியாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலின்படி, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் செயல்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொன்மை வாய்ந்த மொழிகளுக்கு செம்மொழித் தகுதி வழங்குகிற நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதை தேர்வு செய்வதற்காக சாகித்ய அகாடமியின் கீழாக மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 1500, 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மொழிகளுக்கு செம்மொழித் தகுதி வழங்குவதென முடிவு செய்தது.
அக்குழுவின் பரிந்துரையின்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அன்னை சோனியாகாந்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இணைந்து எடுத்த தீவிர முனைப்பின் காரணமாக முதன் முதலாக தமிழுக்கு செம்மொழித் தகுதி 12.10.2004 அன்று வழங்கப்பட்டது. அத்தகைய பெருமையையும், தகுதியையும் தமிழுக்கு வழங்கிய பெருமை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு உண்டு.
இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 முதல் 2014 வரை ரூபாய் 675.36 கோடி சமஸ்கிருதத்திற்கும், ரூபாய் 75.05 கோடி தமிழுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை கூறியிருக்கிறார். ஆனால், சமஸ்கிருதத்தை பரப்புவதற்கு தலைநகர் தில்லியில் ராஷ்ட்ரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பிற்கு 2017-18 இல் ரூபாய் 198.31 கோடி, 2018-19 இல் ரூபாய் 214.38 கோடி, 2019-20 இல் ரூபாய் 231.15 கோடி என மொத்தம் ரூபாய் 643.84 கோடி அந்த மூன்றாண்டுகளில் மட்டும் சமஸ்கிருதத்திற்கு பா.ஜ.க. அரசு வழங்கியிருப்பதை ஆதாரத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். அண்ணாமலை கூற்றின்படி, சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எந்த அடிப்படையில், எதற்காக வழங்கப்பட்டது என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக கூறுவது அப்பட்டமான அவதூறாகும்.
அதே காலகட்டத்தில், அந்த மூன்றாண்டுகளில் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2017-18 இல் ரூபாய் 10.59 கோடி, 2018-19 இ;ல் ரூபாய் 4.65 கோடி, 2019-20 இல் ரூபாய் 7.7 கோடி என மொத்தம் 22.24 கோடி சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் கன்னடம், தெலுங்கு மொழிகளுக்கு தலா ரூபாய் 1 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழை மட்டும் பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை. தென்னக மொழிகளையும் புறக்கணித்து தென்னகத்திற்கு எதிரான ஒரு ஆட்சியை பிரதமர் மோடி இன்றைக்கு நடத்தி வருகிறார்.
அத்தகைய ஆட்சியை வலிமைப்படுத்துவதற்கு தான் தொகுதி மறுசீரமைப்பிற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த முயற்சியை எதிர்த்து தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 58 கட்சிகளை அழைத்து, கருத்துகளை கேட்டு ஏகமனதாக தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். இதில் பங்கேற்று கருத்துகளை கூறுவதற்கு துணிவற்ற கோழைகளாக பா.ஜ.க. உள்ளிட்ட ஐந்து கட்சிகள் இதை புறக்கணித்திருக்கின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தமிழக பா.ஜ.க., இந்தி மொழியை திணிக்க நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் பா.ஜ.க.வின் எதிர்காலத்தின் மீது விழப்போகிற சம்மட்டி அடியாகவே அமையப் போகிறது. பிரதமர் நேரு வழங்கிய உறுதிமொழிக்கு எதிராக இந்தியை திணிக்கிற பா.ஜ.க.வின் முயற்சியை தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடித்துக் காட்டுவார்கள். பா.ஜ.க.வினர் பெறுகிற கையெழுத்தின் மூலமே அவர்களது எதிர்காலம் சூனியமாகிற சூழல் ஏற்படப் போகிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட்டணி அமைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல, தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியும், அண்ணாமலையும் கூட்டணி அமைத்துக் கொண்டு நாள்தோறும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற தமிழர் விரோத அரசியலை செய்து வருகிறார்கள்.
எனவே, இத்தகைய தமிழர் விரோத நடவடிக்கைகளால் 2026 இல் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் ஒளிமயமாக அமையப் போகிறது என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகமும் தேவையில்லை. தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. பா.ஜ.க.வின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அனுமதியின்றி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்: பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!! appeared first on Dinakaran.