டெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிட்டபடி அழைத்து வந்தமைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கையின் ஒரு பகுதியாக 104 இந்தியர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர். 104 இந்தியர்களுடன் நேற்று புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் இன்று காலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பவன் கேரா, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் போது இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்படும் படங்களை பார்க்கும் போது, ஒரு இந்தியனாக தனக்கு மிகுந்த வேதனை அளித்ததாக தெரிவித்தார். 2013ம் ஆண்டு டிசம்பரில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்ததையும் அப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த அமெரிக்க நாடாளுமன்ற தூதுக்குழுவை சந்திக்க மன்மோகன் சிங் மறுத்துவிட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள பவன் கேரா, இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதை வேடிக்கை பார்க்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
The post அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி அனுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் கொந்தளிப்பு!! appeared first on Dinakaran.