உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், “சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியது. ஆனால் கரோனா பெருந்தொற்றை தடுக்கும் பணியில் உலக சுகாதார அமைப்பு திறம்பட செயல்படவில்லை. காலத்துக்கு ஏற்ப அந்த அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை. அமெரிக்காவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, உலக சுகாதார அமைப்புக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்குகிறது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்கா வெளியேறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.