சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில், இன்று (23.12.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளின் முன்னேற்றங்கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் புதுப்பிக்கும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் -II, புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த ஆய்வு கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணைய வழி சேவைகளான தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டம், இணைய வழி வரி வசூல் சேவை மற்றும் இணைய வழி கட்டட வரைபட அனுமதி சேவை ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அதனை மேம்படுத்திடவும் அரசு நலத்திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களிடத்தில் விரைந்து சேர்த்திட வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் பின் தங்கிய கிராமப் பகுதிகளில் அரசு நலத்திட்டங்களை விரைந்து முடித்திடவும் அவ்வப்போது பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்து மக்களின் அடிப்படை தேவைகளை தாமதம் இன்றி நிறைவேற்றிட வேண்டும் எனவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, கூடுதல் இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.