சென்னை: அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை பதவியிலிருந்து நீக்க கோரி கலெக்டரிடம் மனு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவரை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட கலெக்டர்களை சந்தித்து இந்திய குடியரசு தலைவருக்கு பரிந்துரை கடிதம் வழங்க கோரி மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு அளிக்கும் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று நடந்தது. சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் சென்னை துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அங்கிருந்து நேற்று ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், எம்.ஏ.முத்தழகன், ஜெ.டில்லிபாபு, அடையாறு துரை, துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, பழங்குடியினர் அணி மாநில பொருளாளர் தண்டபாணி, எஸ்சி துறை மாநில பொதுச்செயலாளர் மா.வே.மலைய ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் சென்னை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு அளித்த பேட்டியில்,‘‘பிரதமர் மோடி உண்மையாக அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பவராக இருந்தால், சட்டத்தின் படி ஆட்சி நடப்பதாக இருந்தால் உடனடியாக அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற இன்னும் பல போராட்டங்களை நடத்துவோம்.
அமித்ஷாவும், பிரதமர் மோடியும் வேறு அல்ல. இருவரும் ஒரே குழல் ஊதும் நபர்கள்தான். இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தான். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியும் போராடி கொண்டிருக்கின்றனர் அவர்களோடு இணைந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் போராடி வருகின்றனர்” என்றார்.
The post அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்து போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடந்தது appeared first on Dinakaran.