மதுரை: அம்பை – பாபநாசம் சாலை விரிவாக்கப் பணிக்காக அம்பையிலுள்ள நூறு ஆண்டு பழமையான பாரி வேட்டை கல் மண்டபத்தை இடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அம்பை காசிநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் சண்முகஜோதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 1500 ஆண்டு பழமையான காசிநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு உப கோயில்கள், மண்டபங்கள் உள்ளன. பாபநாசம் பிரதான சாலையில் தை பாரி வேட்டை கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபம் நூறு ஆண்டு பழமையானது என தொல்லியல் ஆய்வாளர்கள் சான்றழித்துள்ளனர். மண்டபத்தில் விநாயகர் கோயில் உள்ளது. தை பாரி வேட்டையின் போது காசிநாதசுவாமி கோயில், மன்னார்கோவில் ராஜகோபால குலசேகர ஆழ்வார் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலிருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.