இந்தியாவின் முதல் நவீன நகரமான சென்னை, தன் 386ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இன்றைக்கு இந்த நகரம் தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெருநகரம், உலகின் 35ஆவது பெரிய நகரமாக உள்ளது. இந்த 386 ஆண்டுகளில் சென்னை பெற்றதும் இழந்ததும் எவ்வளவோ. இழந்ததில் முக்கியமானது அதன் இயற்கைச் செழிப்பும் பசுமைப் பரப்புமே.
சென்னையில் 1800களில் தொடங்கி நாடு விடுதலை பெற்றதுவரை அரசினர் தோட்டம் (தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டம்) எனப்படும் பகுதியிலேயே ஆங்கிலேய ஆளுநர்கள் தங்கிவந்தார்கள். இந்த வளாகத்தில் கடைசியாக எஞ்சியிருக்கும் ஆங்கிலேய பாணி விருந்து மண்டபமான ராஜாஜி ஹால், இதற்கு கட்டிட சாட்சி. புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த ஆங்கிலேய ஆளுநர்கள் இந்தத் தோட்ட வீட்டுக்கு வந்த பிறகு அண்ணா சாலை எனப்படும் அன்றைய மவுண்ட் ரோடு முக்கியத்துவம் பெற்றது.