சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ மாணவியருக்காக 2024-2025ம் ஆண்டுக்கு ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைபடித்து நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவ மாணவியரின் அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்காக தமிழக அரசு தற்போது ரூ.6 கோடியே 23 லட்சத்து 8168 நிதியை அரசு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 24.6.2024ம் தேதி நடந்த பள்ளிக்கல்விமானியக் கோரிக்கையின்போது, 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படித்து நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
இதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2021-2022, 2022-2023 மற்றும் 2024-2025ம் கல்வி ஆண்டுகளில் படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதன்படி 2021-2022ல் 18 பேருக்கு ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 609, 2023ம் ஆண்டில் 74 பேருக்கு ரூ.97 ஆயிரத்து 67 ஆயிரத்து 751, 2024ம் ஆண்டில் 333 பேருக்கு ரூ.5 கோடியே 11 லட்சத்து 98 ஆயிரத்து 808 என மொத்தம் ரூ. 6 கோடியே 23 லட்சத்து 8168 செலவினத்தை தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தொகையை மேற்கண்ட மாணவர்களுக்காக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு முதல் படித்தவர்கள் 342 கல்வி நிறுவனங்களில் பட்டியலை தெரிவிக்குமாறும், கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலாளரின் முன்மொழிவை அரசு கவனமாக பரிசீலித்து, உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்வோருக்காக ரூ.6 கோடியே 23 லட்சத்து 8168 தொகையை அனுமதித்தும், அரசாணை வெளியிடுகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.
The post அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கு ரூ.6.23 கோடி நிதி ஒதுக்கி அரசாணை appeared first on Dinakaran.