லாஸ் வேகாஸ்: ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவன் அரோனியனுடன் மோதினார். இதில் அர்ஜுன் எரிகைசி 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் அர்ஜுன் எரிகைசி விளையாடினார்.
கருப்பு காய்களுடன் விளையாடிய லெவன் அரோனியன் கடினமான சூழ்நிலையில் இருந்த போதிலும் உறுதியாக இருந்தார். அதேவேளையில் அர்ஜுன் எரிகைசி சிறந்த நிலையில் இருந்த போதிலும் அதை பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். இதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட லெவன் அரோனியன் அபாரமாக செயல்பட்டு 39-வது நகர்த்தலில் வெற்றி கண்டார்.