திமுக-விலிருந்து விலக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக வனவாசத்தில் இருக்கும் மு.க.அழகிரியின் விசுவாசிகளில் 9 பேர் தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ளக் கோரி திமுக தலைமையிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தென் மாவட்டமே மு.க.அழகிரியின் கண்ணசைவில் தான் இருந்தது. மதிமுக பிளவு ஏற்பட்ட போதுகூட அழகிரியை வைத்துத்தான் தென் மாவட்டங்களில் திமுக கரையாமல் காத்துக் கொண்டார் கருணாநிதி. அதற்காகவே, அழகிரியை தென் மண்டலச் செயலாளர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகளில் அமரவைத்து அழகுபார்த்தார். இந்த நிலையில், ஸ்டாலின் – அழகிரி மோதல் வெடித்து கட்சிக்குள் அழகிரிக்கான பிடிமானம் குறைய ஆரம்பித்தது.