மும்பை: “சத்ரபதி சம்பாஜி மகாராஜா பற்றிய ‘சாவா’ திரைப்படமே முகலாய மன்னர் அவுரங்கசீப் மீது மக்களின் கோபத்தைத் தூண்டியது” என்று நாக்பூர் கலவரம் குறித்து மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
நாக்பூர் கலவரம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வரலாற்றை ‘சாவா’ திரைப்படம் மக்களுக்கு எடுத்துச் சொன்னது. மேலும், அப்படம் அவர்களின் உணர்ச்சிகளைத் துண்டிவிட்டுள்ளது. அத்துடன், முகலாய மன்னர் அவுரங்கசீப் மீதான பொதுமக்களின் கோபத்தையும் அப்படமே தூண்டிவிட்டுள்ளது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் சாதி, மத பேதமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.