சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.