தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக கூறும் போலீஸார், “2022ல் 10,665 போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட 19 வெளிநாட்டினர் உட்பட 14,934 பேரிடமிருந்து 28,383 கிலோ கஞ்சா, 63,848 மாத்திரைகள், 98 கிலோ மற்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என புள்ளி விவரம் தருகிறார்கள்.
ஆனால், போலீஸ் இப்படி எல்லாம் கிடுக்குப் பிடி போடுகிறது என்றதும் போதை மாஃபியாக்கள் தங்களது ரூட்டை மாற்றி இருக்கிறார்கள். இப்போது, ஆட்கள் மூலம் சப்ளை செய்வதற்குப் பதிலாக செல்போன் ‘ஆப்’கள் மூலமும் ஆன்லைன் மூலமும் போதைப் பொருள் ‘சேவை’யை தொடர்கிறார்கள். குறிப்பாக, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகளை போதை வஸ்தாக பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகரித்துள்ளதாக போலீஸார் பதைபதைக்கிறார்கள்.