சென்னை : தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மஹிந்திரா மின்சார எஸ்.யூ.வி. கார்களின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சரின் நல்லாட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொழில்துறையில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ள தமிழ்நாடு, பல்வேறு துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக வளர்ந்து வருகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம் ஆகும். ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் நிலையில் உள்ளது.
மகிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தற்போது தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. முதல்வர் தொடங்கி வைத்த 2 கார்களின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்புடைய நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளன,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் நிலையில் உள்ளது :அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.