ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே நள்ளிரவில் ஷேர்ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் சென்னையை சேர்ந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கார்த்திக் (31), ஷேர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுவேதா. மகள் நிஜிதா(10). உறவினர்கள் பிரசாந்த்(28), வெண்மதி(24). இவர்கள் 5 பேரும் ஷேர் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர். பின்னர் நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு ஆட்டோவில் புறப்பட்டனர்.
ராணிப்ேபட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே வாணியன்சத்திரம் பகுதியில் நள்ளிரவு சென்றபோது முன்னால் சென்ற வேன், திடீரென ‘சடன் பிரேக்’ போட்டு நின்றது. இதனால் கார்த்திக் ஆட்டோவை நிறுத்த ‘பிரேக்’ போட்டுள்ளார். அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, ஷேர் ஆட்டோ மீது ேமாதியது. இதில் ஆட்டோ முன்னால் சென்று வேனில் மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் இடையே சிக்கிய ஷேர்ஆட்டோ சேதமானது. இந்த இடிபாட்டில் சிக்கி சிறுமி நிஜிதா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வேன், கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 டிரைவர்களையும் தேடி வருகின்றனர்.
The post ஆட்டோ மீது லாரி மோதல்: சென்னை சிறுமி பரிதாப பலி appeared first on Dinakaran.