சென்னை : சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், “மகளிர் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள். இல்லத்தை மட்டுமின்றி, உலகத்தையும் இயங்கச் செய்யும் ஆற்றல்மிக்கவர்கள் மகளிர். நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை; ஞாயிற்றுகிழமையும் பெண்களுக்கு இல்லை. மகளிர் தினம் கொண்டாடும் மார்ச் மாதத்தில் நான் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள்.
திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம் இல்லை, பாலின பேதம் இல்லை என்பதுதான். பெண்களை அடிமையாக்க நினைக்கும் எண்ணம் ஒழிந்தால்தான் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சொத்துரிமை என்ற பெரியார் தீர்மானத்தை சட்டமாக்கியவர் கலைஞர். திராவிட இயக்க ஆட்சிக் காலத்தில்தான் பெண்களுக்கான உரிமைகள் மீட்டுத் தரப்பட்டன. மகளிர் உயர மாநிலம் உயரும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம். இதுபோன்ற நிகழ்ச்சியை 50, 100 ஆண்டுகளுக்கு முன் பார்க்கவே முடியாது. இந்த நிகழ்ச்சி மூலம் உங்களுக்காக இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் பெண்கள், பாதுகாப்பாக தங்க, தோழி விடுதிகள் உதவியாக உள்ளது.
காஞ்சி, ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டையில் ரூ.72 கோடியில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். 700 பேர் தங்கும் வகையில் 24 மணி நேர பாதுகாவலர், பயோ மெட்ரிக் வசதியுடன் கூடிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.3,190 கோடியில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவினர் சிறந்த தொழில் முனைவோராக உருவாகிட வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வழங்கும் கடனை எனது நம்பிக்கையின் அடையாளமாக பார்க்க வேண்டும்.
திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான திட்டங்களை பார்த்து ஆண்களும் கேட்கின்றனர். ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்; பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை. அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சம உரிமையும் உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும். எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என ஆண்கள் கேட்கும் அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நீங்கள் கடமை செய்ய மட்டுமல்ல உரிமை பெறவும் பிறந்தவர்கள். வீரமும் விவேகமும் பெண்களின் அடையாளமாகட்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்; பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.