சென்னை: அமலாக்கத் துறையால் உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதில் 13-03-2025 அன்று மாலை சோதனை தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், பல்வேறு பிரிவுகளில் பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த முதல் தகவல் அறிக்கை எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை. மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 2,157 கடைப்பணியாளர்களுக்கு 2023ம் ஆண்டு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி பிப்ரவரி 2023-ல் கோரப்பட்டு, பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் குறைவான தொகை கோரிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டது. கேஒய்சி விவரங்கள், வங்கி வரைவோலைகள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு மதுக்கூடத்திலும் குறுமத் தொகை முறையாக நிர்ணயிக்கப்பட்டு குறுமத் தொகைக்கு மேல் கூடுதலாக கேட்கப்படுபவர்களுக்கு மதுக்கூட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் மாதம் மாவட்ட மேலாளரால் மதுக்கூட ஒப்பந்தங்கள் இணையவழி மூலமாக வரவேற்கப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரால் அமைக்கப்பட்ட கூராய்வுக் குழுவால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் திறக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. இந்தமுறை மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எவ்வித பாரபட்சமும் இன்றி உரிய வழிமுறையின் அடிப்படையில் ஒவ்வொரு மதுபான வகையின் 3 மாத விற்பனை அளவினை கணக்கிட்டும், அவற்றுடன் கடைசி மாத விற்பனை அளவினை கணக்கிட்டும், அதனடிப்படையிலான கொள்முதல் வெளிப்படையான இணையவழியில் உரிய வழிமுறையில் மட்டுமே வழங்கப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபுட்டிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே பணபரிமாற்றங்கள் நடைபெற்றதாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயானது எனினும், இந்த பணப்பரிமாற்றங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப் பெற்றதாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும், இதில் ரூபாய் 1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. இவ்வாறு உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு, இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆதாரங்கள் ஏதுமின்றி உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது: அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை; அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் appeared first on Dinakaran.