சென்னை: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு இதுவரை ரூ.212 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த விவரம் பின்வருமாறு:
மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) : கடையம் ஒன்றியம், தோரணமலை முருகன் திருக்கோயிலில் கிரிவலப்பாதை அமைப்பதற்கு அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் சேகர்பாபு : தோரணமலை முருகன் திருக்கோயிலின் கிரிவல பாதையை சீரமைக்க ரூ.2 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இத்திருக்கோயிலில் போதிய நிதி வசதி இல்லாததால் உபயதாரர் நிதி எதிர்நோக்கி இருக்கின்றோம். அது இயலாத பட்சத்தில் ஆணையர் பொது நல நிதியிலிருந்து அந்த பணிகளை மூன்று மாத காலத்திற்குள் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன்.
மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) : தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் கோயில்களுக்கு திருப்பணி நிதியுதவி அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. தற்போது அதை இரண்டரை லட்சம் ஆக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் அது போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் கூடுதலாக மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு : ஆதிதிராடவிடர் பகுதி மக்கள் வாழும் பகுதி திருக்கோயில் திருப்பணி நிதியுதவி திட்டமானது 1997ம் ஆண்டு கலைஞர் முதன்முதலில் ஒரு திருக்கோயிலின் திருப்பணிக்கு ரூ.25 ஆயிரம் என்று நிதியுதவி மானியமாக வழங்கி தொடங்கப்பட்ட திட்டமாகும். இதனை அதிமுக ஆட்சியில் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் திராவிட மாடல் ஆட்சி வந்தவுடன், அந்த தொகை இரண்டரை லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அமைதி புரட்சியை ஏற்படுத்தினார். இந்த அரசு பொறுப்பேற்றபின் கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியினர் மக்கள் வசிக்கின்ற பகுதி திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு நிதியுதவியாக இதுவரை ரூ.212 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உறுப்பினர் கோரிய கூடுதல் தொகை ரூ.50,000 யும் சேர்த்தால் இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.12 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக தேவைப்படுகின்றது. இதனை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, விரைவில் ரூ.3 லட்சமாக அந்த நிதியுதவி உயர்த்துவதற்கு வழிவகை காணப்படும்.
சிவகாமசுந்தரி ( கிருஷ்ணராயபுரம்): எனது தொகுதிக்கு உட்பட்ட பழைய கவுண்டன் பேரூராட்சியில் இரண்டாம் ராஜேந்திர சோழரால் கட்டப்பட்ட ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் பராமரிப்பின்றி உள்ளது. இந்த திருக்குளத்தை சீர் செய்து, கம்பி வேலி அமைத்து, சிறு பூங்கா அமைத்து தரவும், திருமண மண்டபம் அமைத்து தரவும் அமைச்சர் முன்வருவாரா என அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு : நீங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இன்றைய தினமே ஆய்வினை மேற்கொள்ள செய்து அதனுடைய நிலையை அறிந்து, உடனடியாக அந்த பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எஸ்.சேகர் ( பரமத்தி வேலூர்) : வாழவந்தி ஊராட்சியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலின் தேர் வரும் வீதி பழுதடைந்துள்ளதால் தேர் திருவிழா கால தாமதமாகிறது. ஆகவே அந்த சாலையை மேம்படுத்தி இந்த ஆண்டு தேர் திருவிழாவினை நடத்த அரசு முன்வருமா ?
அமைச்சர் சேகர்பாபு : உறுப்பினர் கோரிய வாழவந்தி மாரியம்மன் திருக்கோயிலுடைய திருவிழா இந்த ஆடி மாதம் அசைந்து வருகின்ற தேரால் அந்த மாரியம்மன் குதூகுலம் அடைவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஐட்ரீம் மூர்த்தி (ராயபுரம்): எனது தொகுதியில் உள்ள பனைமரத் தொட்டி பகுதியில் கடந்த நிக்ஜாம் புயலில் அங்கே இருந்த இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த இரண்டு ரேஷன் கடைகள் புயலால் பாதிக்கப்பட்டு அந்த கடைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் மற்ற இடத்தில் போய் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடம் இந்து சமய அறநிலையத்துறை சொத்து என்பதால் சட்டமன்ற உறுப்பினர் நிதி கொடுக்க இயலாத நிலை உள்ளது. எனவே அதனை சீர்செய்து தருவாரா என கேட்டு அமைகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான இடத்தில் மற்றொரு பயன்பாட்டிற்கு இடங்கள் தேவைப்படுகின்ற போது அந்தத் துறையின் சார்பில் கருத்துரு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புகின்ற பட்சத்தில் நியாய வாடகை கமிட்டியால் அதற்கு வாடகை நிர்ணயம் செய்யப்படும். அந்த வாடகை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு அந்த வாடகையை சம்பந்தப்பட்ட துறை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அந்த இடம் அவர்களுக்கு அளிக்கப்படும். அதன் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியை பயன்படுத்துவதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்ற வழிகாட்டுதலை தெரிவித்து அதற்குண்டான முயற்சியை அவரோடு சேர்ந்து நானும் எடுக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) : கோட்டூர் கொழுந்தீஸ்வரர் சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டு காலம் பழமையானது. அப்பகுதி மக்களின் மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய ஆலயமாக திகழ்கிறது. அந்த திருக்கோயிலுக்கு திருத்தேர் வழங்க அரசு முன் வருமா என கேட்டு அமைகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: உறுப்பினர் கோரிய கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஏற்கனவே திருத்தேர் இருந்து பழுதடைந்து இருந்தால் உடனடியாக மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். புது தேர் கேட்கின்ற பட்சத்தில் அந்த தேர் சுற்றி வருகின்ற பாதைகளின் தன்மையை அறிந்து எந்த வகையில் தேரை ஏற்பாடு செய்து தர முடியுமா அந்த வகையில் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு விவாதிக்கப்பட்டது.
The post ஆதிதிராவிட, பழங்குடியினர் மக்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு இதுவரை ரூ.212 கோடி நிதியுதவி : பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.