ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நேற்று காலை 7.27 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
ஆந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டினம், ஜெக்கைய்யா பேட்டை, நந்திகாமா, ஏலூருவிலும் தெலங்கானாவில் ஹைதராபாத், கம்மம், ரங்காரெட்டி, வாரங்கல், கரீம்நகர், ஜனகாமா உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று காலை 7.27 மணிக்கு தீடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 3 நொடிகள் வரை நீடித்த இந்த நில நடுக்கத்தால் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் கீழே சரிந்தன. நாற்காலி, சோபாக்களில் அமர்ந்திருந்தவர்கள் தலை சுற்றுவது போல் உணர்ந்தனர். தெருக்களில் உள்ளவர்களும் இந்த நில நடுக்கத்தை உணர்ந்ததாக கூறுகின்றனர். சுங்கராஜு பல்லி எனும் கிராமத்தில் ஒரு வீட்டின் சுவர் நில நடுக்கத்தால் இடிந்து விழுந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 -ஆக பதிவானது.