துரைப்பாக்கம்: திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை தரும் மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக திருவான்மியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவான்மியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகம் அளிக்கும் வகையில் பையுடன் சுற்றி திரிந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவர், வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வுங்கிளியான்சிங் (30) என்றும் சென்னை தரமணி, பள்ளிப்பட்டு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. ஆன்லைன் மூலம் போதை தரக்கூடிய வலிநிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து அதை சென்னைக்கு வரவழைத்து வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக விற்பனை செய்ததும் 10 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து 8100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வலிநிவாரணி மாத்திரை விற்பனை: திருவான்மியூரில் மணிப்பூர் பெண் கைது appeared first on Dinakaran.