கேப் டவுன்: அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் கீழ் கல்வி, விளையாட்டு உட்பட பெண்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அணியுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதை இங்கிலாந்து கிரிக்கெட் அணி புறக்கணிக்க வேண்டும் என அண்மையில் அந்த நாட்டின் அரசியல் பிரமுகர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்தச் சூழலில், அதே கருத்தை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தற்போது வலியுறுத்தியுள்ளார்.