சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி, நிலம், வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்டார். சிறையில் உள்ள நாகேந்திரனின் கூட்டாளிகளை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி வியாசர்பாடியில் உள்ள நாகேந்திரனின் பூர்வீக வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நாகேந்திரனின் தம்பிகள் முருகன், ரமேஷ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின் பேரில் நாகேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் என மொத்தம் 8 இடங்களில், புளியந்தோப்பு சரகத்தில் பணிபுரியும் 8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் நேற்று காலை 8 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக நாகேந்திரனின் தம்பி முருகன் என்பவரின் நெருங்கிய நண்பர் விநாயகம், வழக்கறிஞர் சீனிவாசன், நாகேந்திரனின் தங்கை கற்பகம், நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கட்டியுள்ள புதிய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை முடிவில் நாகேந்திரனின் உறவினர்கள் வீடுகளில் இருந்து நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்களை விசாரணைக்கு உட்படுத்தி அதன் முடிவில் தேவைப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை: நிலம், வங்கி கணக்கு ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.