தண்டையார்பேட்டை: நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு குறித்த புகாரை போலீசார் வாங்காததால், காவல்நிலையம் முன்பு தனது உடலில் பெட்ேரால் ஊற்றி வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (30). திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியில் ஸ்டீல் பாலிஷ் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி ஆர்.கே.நகர் காவல்நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெளியில் அமர்ந்து மதுஅருந்தியுள்ளார். அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார், தங்களை தாக்கியதாக காவல்நிலையம் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர், உறவினர்கள் காவல்நிலையம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜனை அழைத்து சென்றுள்ளனர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு கடந்த ஒருமாதகாலமாக ராஜன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தான் வேலை செய்யும் உரிமையாளரிடம் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடையில் ராஜனும், நண்பரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். அதன்பிறகு ராஜன், மதுபோதையில் புகார் கொடுக்க ஆர்.கே.நகர் காவல்நிலையம் சென்றுள்ளார். ராஜன் போதையில் இருந்ததால் வீட்டுக்கு சென்று புகாரை எழுதி எடுத்து வருமாறு போலீசார் கூறியுள்ளனர். சிறிது நேரம் கழித்து காவல்நிலையம் வந்த ராஜன், காவல்நிலைய வாசல் முன்பு நின்றபடி பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ராஜன் மீது பற்றிய தீயை போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்து, ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜன் தீக்குளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொருக்குப் பேட்டை பாரதி நகரை சேர்ந்த பொங்கல் என்ற அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின்பேரில் மாதவன் என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர். இதில், ராஜன் உட்பட 3 பேரும் சேர்ந்து மதுஅருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு குறித்த புகாரை போலீசார் வாங்காததால் தீக்குளித்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு appeared first on Dinakaran.