சென்னை: கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பலியானது தொடர்பான வழக்கில் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக தற்போது பதவி வகிக்கும் பழனியாண்டிக்கு சொந்தமான கரூரில் கல் உடைக்கும் ஆலை உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் என்ற தொழிலாளி மரணமடைந்தார்.
இதுசம்பந்தமாக வெளியான செய்தியின் அடிப்படையில் ஆலையில் ஆய்வு செய்த திருச்சி தொழில் பாதுகாப்பு துறை துணை இயக்குனர், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, பழனியாண்டிக்கு எதிராக கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருச்சி தொழில் பாதுகாப்பு துறை துணை இயக்குனர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாததால் தான் தொழிலாளி பலியாகியுள்ளார் என்பது சக தொழிலாளர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெளிவாவதாக தெரிகிறது என்று கூறி, வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். வழக்கை மீண்டும் விசாரித்து சட்டப்பப்டி தீர்ப்பளிக்குமாறு கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
The post ஆலை விபத்தில் தொழிலாளி பலி சம்பவம் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ விடுதலை: ஐகோர்ட் ரத்து appeared first on Dinakaran.