திருச்சி: தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்க வேண்டும் என ஆளுநர் கூறுவது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வின் ஆதிக்க மனப்பான்மையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் தான் ஆளுநர் ஆர்என் ரவி. இந்தியாவில் பழமொழிகள் பேசுகிற தேசிய இனங்கள் வாழ்கிறோம். அதில் ஒன்றுதான் இந்தி. தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்க வேண்டும் என ஆளுநர் கூறுவது அவரின் ஆதிக்க மனப்பான்மையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியை தாய் மொழியாக கொள்ளாத எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க கூடாது.
ஆர்என் ரவி ஒரே தேசம், ஒரே மொழி என்கிற ஆர்எஸ்எஸ் அஜண்டாவை செயல்படுத்துவதற்காக இப்படி பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் இந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை உருவாக்குவது, இந்திக்குப்பிறகு சமஸ்கிருதமே ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள், விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என்.ரவியின் மாயாஜால பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள் ஏமாற மாட்டார்கள். விசிக எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். விசிக தொண்டர்களை தேர்தல் பணியாற்ற ஊக்கப்படுத்துகிறோம். வி.சி.க இல்லாமல் இங்கு அரசியல் காய்களை யாரும் நகர்த்த முடியாது என்கிற நம்பிக்கையை தொண்டர்களிடம் ஊட்டியுள்ளோம்” என்றார்.
The post ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு தமிழக மக்கள் இணங்க மாட்டார்கள்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.