புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சென்னையில் தனியார் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண். இவரது பயிற்சி நிறுவனத்தில் தீபிகா என்பவர் ஆழ்கடல் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இவரும் புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஜான் டி பிரிட்டோவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாரா கிளைடிங் செய்து காதலை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஜான் டி பிரிட்டோ மற்றும் தீபிகா ஆகியோர், கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக நீருக்கடியில் திருமணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி புதுச்சேரி கடல் பகுதியில் 5 கிமீ தூரத்தில் 50 அடி ஆழத்தில் தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து இவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன், தம்பதி இருவரும் நேற்று காலை புதுச்சேரி அருகே தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்த படகு மூலம் அங்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் திருமண கோலத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி கடலுக்குள் சென்றனர். பின்னர் காதல்ஜோடி இருவரும் ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
The post ஆழ்கடலில் காதல்ஜோடி திருமணம் appeared first on Dinakaran.