சென்னை: தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதையொட்டியமத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திர வட தமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவியது.இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் இன்று வலுவிழக்கும். இதற்கிடையே, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.