புதுடெல்லி: நாடு கடத்தப்படும் இந்தியர்கள், எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மேலும், அமெரிக்க ராணுவத்தால் இந்தியர்கள் கைவிலங்குடன் நாடு கடத்தப்பட்டது குறித்தும் அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.