சென்னை: வெறுப்பவர்களையும் நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் அமுதமொழியை மனதில் கொண்டு இந்தியாவின் மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க கிறிஸ்துமஸ் நாளில் உறுதியேற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வருமாறு: மனிதகுல வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகவும், மனிதநேயத்தின் மாண்பை உரைக்கும் மாமருந்தாகவும் உபதேச மொழிகளை வழங்கிய ரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள். மாபெரும் புரட்சியாளரான கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ தன் வாழ்க்கையில் தன்னை மிகவும் கவர்ந்த வாசகங்கள் இயேசுவின் மலைப்பிரசங்கம்தான் என்றார்.