புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இனிமேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கனடா நாட்டில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி 7 உச்சிமாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கனடா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.