நியூயார்க்/ புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும், இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.