லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ம் தேதி பரவிய காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. இதுவரை 10,000 வீடு, கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 1.80 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வீடும் தீயில் சிக்கி விட்டது. இந்த தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துவிட்டது.
பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 7,500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் போராடி வருகின்றனர். முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. வேகமாக நகரும் கென்னத் தீயானது, சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் இருந்து வென்ச்சுரா கவுண்டிக்கு நகர்ந்தது. குடியிருப்புகளும், மலையும், நிறுவனங்களும் தீப்பற்றி எரிவதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் அமெரிக்க மீட்புக் குழு நிர்வாகம் தடுமாறி வருகிறது.
ஏனெனில் இந்த தீயால் குறைந்தது ஐந்து தேவாலயங்கள், ஒரு ஜெப ஆலயம், ஏழு பள்ளிகள், இரண்டு நூலகங்கள், பார்கள், உணவகங்கள், வங்கிகள் அனைத்தும் நாசமாகி விட்டன. சுமார் 29 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பகுதி தீயால் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு குறித்த புள்ளிவிவரங்களையோ அல்லது எத்தனை கட்டிடங்கள் எரிந்தன என்பது குறித்த விவரங்களையோ அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் வானிலை மற்றும் அதன் தாக்கம் குறித்த தரவுகளை வழங்கும் தனியார் நிறுவனமான அக்கு வெதர் அமைப்பு வியாழக்கிழமை வரையிலான தீ விபத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் மதிப்பீட்டை ரூ.13 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணித்துள்ளது. லாஸ்ஏஞ்சல்சின் ஹாலிவுட் ஹில்ஸில் ஏற்பட்ட தீயை அணைக்க விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
காட்டுத்தீ ஒரு பார்வை
தீ பற்றியது – ஜன.7
சேத பரப்பளவு – 29 ஆயிரம் ஏக்கர்
கட்டிடங்கள் – 10 ஆயிரம்
வெளியேற்றப்பட்ட மக்கள் – 1.80 லட்சம் பேர்
பலி எண்ணிக்கை – 10
தீயணைப்பு வீரர்கள் – 7500
சேத மதிப்பு – ரூ.13 லட்சம் கோடி
* எரியும் தீயில் கொள்ளை: 20 பேர் கைது
லாஸ்ஏஞ்சல்ஸ் பற்றி எரியும் போது முக்கிய வீடுகள், நிறுவனங்களில் புகுந்த கொள்ளையடித்ததற்காக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளையை தடுக்க சாண்டா மோனிகா நகரத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சொத்துக்களைப் பாதுகாக்க தேசிய பாதுகாப்புப் படையினர் தீயால் எரிந்து நாசமான பகுதிகளுக்கு அருகில் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* எதனால் இந்த தீ விபத்து?
லாஸ்ஏஞ்சல்ஸ் தீ வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணம், அங்குள் காடுகளில் ‘சாண்டா சனா’ காற்று தான். இந்த காற்று மிகவும் சூடாக இருக்கும். இலையுதிர்காலத்தில் வீசுகின்ற இந்த காற்றானது தீயை மேலும் தீவிரப்படுத்துகிறது. சுமார் 129 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக உள்ளது. அதிக காற்று காரணமாக இந்த தீ வேகமாக பரவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று லாஸ்ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் கூறினார். காற்று மேலும் வலுவடையும் என்ற எச்சரிக்கை அமெரிக்க மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
The post இன்னும் வேகமாக பரவுகிறது லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை உருக்குலைத்த காட்டுத்தீ: 10,000 கட்டிடங்கள் நாசம்; பலி 10 ஆக உயர்வு; ரூ.13 லட்சம் கோடி சேதம் appeared first on Dinakaran.