லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தென் ஆப்பிரிக்க அணி தொடரில் இருந்து வெளியேறியது. 363 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியால் 312 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் மில்லர் தனி வீரராக போராடி 67 பந்துகளில் சதம் விளாசிய போதிலும் அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் இந்தத் தொடரில் தங்கள் அணி ஓய்வு இல்லாமல் துபாய்க்கும் அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் பயணம் செய்த நல்லது அல்ல என டேவிட் மில்லர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தனது அனைத்து லீக் ஆட்டங்களையும் பாகிஸ்தானில் விளையாடியது. அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்த போதிலும், ‘ஏ‘ பிரிவில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தின் முடிவு தெரிந்த பின்னரே அரை இறுதியில் யார், யாருடன் மோதுவார்கள் என்பது முடிவாகும் என்ற சூழ்நிலை இருந்தது.