கரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது இலங்கை.
எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.
இதனால் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசுக்கு எதிரான நீண்ட போராட்டம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை இதன் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக விளக்குகிறது இந்த கட்டுரை.
1948-இல் பிரிட்டனிடம் இருந்து விடுலை பெற்ற பிறகு இலங்கை எதிர் கொண்டிருக்கும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி இது. உணவுப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. மின்வெட்டு கடுமையாக இருக்கிறது.
நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
நாட்டின் நிலைக்கு அரசே காரணம் என மக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
ரசாயன விவசாயத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளதால் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி, புதிய அமைச்சரவையை உருவாக்கினர். ஆனால் அதுவும் நீடித்திருக்க வில்லை. நாடாளுமன்றத்தில் பல எம்.பி.க்கள் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிவிட்டனர்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் இல்லாத புதிய அமைச்சரவை இலங்கையில் பதவியேற்றுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது ஏன்?
இலங்கைக்கு மூன்று வழிகளில் அதிகமான பணம் வருகிறது. ஒன்று தேயிலை, இரண்டாவது ஆடை உற்பத்தி மூன்றாவது சுற்றுலா. இதை மூன்று ‘டி’ என்கிறார்கள். பொருளாதாரத்தில் இந்த மூன்று துறைகள்தான் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.
தமிழும் சிங்களமும் இணைந்திருக்கும் இலங்கை சினிமா; நீடிக்கும் சிக்கல்கள் என்னென்ன?
இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு
இலங்கை கடலினை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும் வான் பரப்பை விற்பதாகவும் கொந்தளிப்பு
இந்த வழக்கத்தை உடைத்தது 2020-ஆம் ஆண்டில் வந்த கொரோனா. 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையும் அண்டை நாடுகளும் சர்வதேச விமானச் சேவைகளை நிறுத்தின. நாடும் முடங்கியது. பொருளாதாரத்தின் தூண்களாக இருந்த தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலாத் துறை ஆகிய அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன.
இந்த மூன்றைத் தவிர வேறு எந்த நிரந்த வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது எப்படி?
பிற நாடுகளின் நாணய மதிப்பில் ஒரு நாடு வைத்திருக்கும் பணமே அந்நியச் செலாவணி கையிருப்பு எனப்படுகிறது. வங்கிப் பத்திரங்கள், கடன் பத்திரங்கள், வைப்பு நிதி போன்ற பல வழிகளில் அந்நியச் செலாவணி சேமிக்கப்படுகிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
பொதுவாக ஒரு நாட்டின் மத்திய வங்கி இவற்றைப் பேணும். ஒரு குறிப்பிட்ட அளவில் அந்நியச் செலாவணியைக் கையிருப்பில் வைத்திருப்பது பாதுகாப்பானது. தங்களது நாட்டின் நாணய மதிப்பு குறைந்தாலோ, வேறு வகையிலான நெருக்கடி ஏற்படும்போதோ இது கைகொடுக்கும்.
பெரும்பாலும் அமெரிக்க டாலர்களிலேயே அந்நியச் செலாவணி வைக்கப்படுகிறது. உலகத்திலேயே சீனாதான் அதிக அந்நியச் செலாவணியைக் கையிருப்பில் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி அந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.35 ட்ரில்லியன் டாலர்கள்.
இந்த மதிப்பு இலங்கையைப் பொறுத்தவரை 2020 மார்ச் மாதத்தில் 2.3 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. இலங்கைக்கான வருமானம் குறையத் தொடங்கியதால், இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி தொடர்ச்சியாகவே வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
அந்நியச் செலாவணி கையில் இல்லாவிட்டால் எதையும் இறக்குமதி செய்ய முடியாது. இது பொருளாதார நெருக்கடியின் ஆபத்தை உணர்த்தக் கூடியது.
அரசு என்ன செய்தது?
2019-ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது கோட்டாபய ராஜபக்ஷ வரிகளைக் குறைத்தார். இதனால் சர்வதேச சந்தையில் அந்நிய நாணயத்தை வாங்கும் அளவுக்கு இலங்கை அரசிடம் பணம் இல்லாமல் போனது.
2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அந்நியச் செலாவணி, அதாவது அமெரிக்க டாலர் கையிருப்பு குறையத் தொடங்கியதும் ரசாயன உரங்கள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இது உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
வேறு வழியில்லாமல் உணவு தானியங்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியதால் அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் குறைந்து போனது.
விலைவாசி ஏன் உயர்ந்தது?
இலங்கையில் பல பொருள்களின் பல மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. இதற்கு இரண்டு வகையான காரணங்களைக் கூறுகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியரான அமிர்தலிங்கம்.
அந்நியச் செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கை நாணயத்தின் நெகிழ்வுத் தன்மையைப் பேணுவதற்காக ரூபாயின் மதிப்பை இலங்கை மத்திய வங்கி குறைத்தது. இதனால் பொருள்களின் மதிப்பு படிப்படியாக உயரத் தொடங்கியது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200 என்ற அளவில் இருந்து 300 ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்திருந்திருக்கிறது. ரூபாயின் மதிப்புச் சரிந்தததால், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் திடீரென அதிகரித்தன.
பெட்ரோல், டீசல், எரிவாயு, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருக்கின்றன. இவற்றுக்குக் கொடுக்கும் அளவுக்கு இலங்கை வங்கிகளிடம் டாலர் கையிருப்பில் இல்லை. அதாவது அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி தடைபட்டதால், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் கட்டுப்பாட்டை இழந்து உயரத் தொடங்கின.
வேறு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன?
அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. பால்மா, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.
நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. அல்லது மூடப்பட்டிருக்கின்றன. அது நெடிய மின்வெட்டுக்கு வழிவகுத்திருக்கிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
வாகனங்கள் இயக்கப்படாததால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளில் திடீர் ஆள் பற்றாக்குறையும், மருந்துகள் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் பொருளாதார பேராசிரியர் அமிர்தலிங்கம்.
பொருளாதார நெருக்கடி இலங்கைக்குப் புதிதா?
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி போல சமகாலத்தில் கண்டதில்லை எனப் பலரும் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையில் 1970ம் ஆண்டுகளில் காணப்பட்ட பஞ்ச நிலைமையை விடவும், தற்போது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் கூறுகிறார்.
1970களில் இறக்குமதிக்கு தடை விதித்ததே அன்றைய நிலைமைக்கு காரணம். ஆனால் இப்போது இறக்குமதி செய்வதற்கு பணமே இல்லாமல் நாடு தவிக்கிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கைக்கு எவ்வளவு கடன் இருக்கிறது?
இலங்கைக்கு சுமார் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதில் சுமார் 7 பில்லியன் டாலர்களை இந்த ஆண்டே செலுத்த வேண்டியிருக்கிறது.
ஆனால் இலங்கையின் கையிருப்பில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களே இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
இலங்கை ரூபாய் செல்லாததாகி விடுமா?
இலங்கையின் நாணயம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதனால் முற்றிலுமாக அதன் மதிப்பை இழந்து வேறொரு நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படுமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.
ஆனால் மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்கிறார் விஜேசந்திரன்.
“இலங்கை பொதுவாக தன்னுடைய ரூபாவின் பெறுமதியை இழந்துக்கொண்டிருக்கின்றது. பாரிய முதலீடுகள், சர்வதேச நாடுகளின் உதவிகள் அல்லது நன்கொடைகள் கிடைப்பதன் ஊடாக, இந்த நிலைமையிலிருந்து மீளலாம். ஆகவே, அதன் அடிப்படையில் இன்னுமொரு நாட்டின் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கருத முடிகிறது.”
இலங்கை கடலினை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும் வான் பரப்பை விற்பதாகவும் கொந்தளிப்பு
இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? – 5 வாய்ப்புகள்
ஒருவேளை இலங்கையின் ரூபாய் முற்றிலும் மதிப்பிழந்தால், “இலங்கைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தியா அல்லது சீனாவின் நாணயத்தை இலங்கை பயன்படுத்தலாம். ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை” என்கிறார் விஜேசந்திரன்.
இலங்கைக்கு யார் உதவி செய்வார்கள்?
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதி உதவியையே இலங்கை நம்பியிருக்கிறது என்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது.
டாலர்
இவற்றைக் கடந்து முதல் முறையாக ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச செலாவணி நிதியத்தையும் இலங்கை அணுகியிருக்கிறது. அதன் பிரதிநிதிகளை கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துப் பேசினார். ஐஎம்எஃப்பிடம் கடன் பெறுவதில்லை என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீனாவும் இலங்கையின் அந்நியச் செலாவணி நிலையை மேம்படுத்த ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகளிடமும் இலங்கை கடன் பெற்றிருக்கிறது.
ஐஎம்எஃப்- இடம் கடன் பெறுவதில் சிக்கல் உண்டா?
சர்வதேச செலாவணி நிதியும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடன்களைக் கொடுத்துவிடக் கூடிய அமைப்பு அல்ல. இந்தியா, இலங்கை உள்பட 190 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட அமைப்பு அது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வரிகளை உயர்த்த வேண்டியது சர்வதேச செலாவணி நிதியத்தின் முதல் விதியாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம்.
இதனால் பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரிகள் கணிசமாக உயரக்கூடும். பல்வேறு வகையான இலவச, குறைந்தவிலை சமூக நலத் திட்டங்களில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரிடும்.
ஐஎம்எஃப்
ஆயினும் ஐஎம்எஃப்-இல் கடன் பெறுவதன் மூலம் இலங்கையின் கடன் தர நிலை மேம்படும் என்றும், அதனால் பிற கடன்களை அடைப்பதற்கு அவகாசம் பெறுவது தொடர்பான பேச்சுகளைத் தொடங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அரசியல் நிலை எப்படியிருக்கிறது?
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த நெருக்கடிக்கு அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பிரதமர் மஹிந்தவோ பதவி விலகப் போவதில்லை என தெரிவித்திருந்தனர். ஆனால் தொடர் போராட்டம் அதனை அடுத்து எழுந்த வன்முறை காரணமாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகினார். பின் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்ற பிறகு பேசிய ரணில், இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்க ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியமாக தேவை என்று தெரிவித்தார்.
சமீபமாக சிறப்பு உரையாற்றிய ரணில், இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களில் வாழ்க்கையை சாதாரணமாக வைத்திருக்க 5 பில்லியன் டாலர்கள் தேவை என்று தெரிவித்தார்.
மேலும், “எரிவாயு இறக்குமதிக்காக ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியுள்ளது. அடுத்த 6 மாத காலத்திற்கு எரிவாயு இறக்குமதிக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றது.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
அத்தியாவசியமற்ற பயணங்களை இயலுமான வரை மட்டுப்படுத்திக் கொள்ளவும்.” என்றும் தெரிவித்தார்.