புதுடெல்லி: மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அப்போது"தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எந்த புகாரும் கூறுவது கிடையாது. அதேநேரம் தேர்தலில் தோல்வியை தழுவும் கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்களை கூறுகின்றன” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008-ம் ஆண்டில் இவர் பிரஜா சாந்தி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த கட்சிக்கான அங்கீகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்தச் சூழலில் கே.ஏ. பால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.