மதுரை: ஈஷா யோகா மையத்துக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஈஷா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கோவை மாவட்ட போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஈஷா மையம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். என் புகாருக்கு போலீஸார் மனு ரசீது வழங்கவில்லை. என் புகாரை விசாரிக்கவும் இல்லை.