சென்னை: உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை ஊக்குவிக்கும் என விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் 8 நாட்கள் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 9 மாதங்களாக நீடித்தது. இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்கள் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு புறப்பட்டனர்.
பின்னர் திட்டமிட்டப்படி சரியாக அதிகாலை 3.27 மணிக்கு ஃபுளோரிடா கடலில் டிராகன் விண்கலம் இறங்கி மிதந்த நிலையில், விண்கலத்தை அங்கு தயாராக இருந்த கப்பலுக்கு இழுத்து சென்றனர். பின்னர் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விண்கலத்தை திறந்து விண்வெளி வீரர்களை ஒவ்வொருவராக மீட்டனர். மூன்றாவதாக அழைத்து வரப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் உற்சாகத்துடன் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார்.
இந்நிலையில் விண்வெளியில் சாதித்த சுனிதா வில்லியம்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்; திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோரின் மீள்தன்மைக்கு எனது வணக்கம்.
குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். நான்கு பேர் கொண்ட குழு – Crew9 உங்களை நமது வீட்டிற்கு வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை ஊக்குவிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை ஊக்குவிக்கும்: விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!! appeared first on Dinakaran.