சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் தமிழக ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணை வேந்தர்கள் மாநாடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனவே, ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதுடன், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் தமிழகத்தில் கல்விநிலை பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கருத்து தெரிவித்தது. ஆனால், புதிய கல்விக் கொள்கை விரைவில் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.
மேலும், அது தொடர்பாக பொதுமக்கள் கல்வியாளர்கள் கருத்து கேட்கப்படும் என்று அறிவித்து அதற்கான கால அவகாசமும் வழங்கியது. இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை சில மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளன. முன்னதாக தமிழகத்தில் பன்வாரிலால் புரோகித் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்தே உயர் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையில் தெ ரிவிக்கப்பட்ட அம்சங்களை நடைமுறைக்கு கொண்டு வர ஆளுநர் நடவடிக்கை எடுத்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ள 16 பல்கலைக் கழகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். அதற்கான நகர்வுகளையும் அவர் செயல்படுத்தத் தொடங்கியதுடன், வேந்தர் என்ற முறையில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் போது தன்னிச்சையாக முடிவெடுத்து, வெளி மாநில நபர்களை தமிழகத்தில் பல்கலை துணை வேந்தர்களாக நியமிக்கவும் செய்தார். இது பரவலாக பெரும்பாலான பல்கலைக் கழகங்களுக்கும் நடந்தது.
அதற்கு தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால் ஆளுநரே பல்கலை வேந்தர் என்பதால் அவர்தான் முடிவெடுப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். இந்நிலையில், அவர் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரும் மாநில அரசின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தொடங்கினார்.
புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பில் உயர் கல்வி மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் உயர் கல்வியில் பாட திட்டம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது. குறிப்பிட்ட காலத்தில் நிதி கிடைக்காவிட்டால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதனால் உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இருப்பினும், பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதாக ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தியது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததுடன், ஒரு குழுவை அமைத்து அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று நடப்போம் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதற்கும் ஒன்றிய அரசு மவுனமாக இருந்து வந்தது.
இதற்கிடையே, உயர் கல்வித்துறையில் துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்தார். அதற்கும் தமிழக அரசு கண்டனம் தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டில் ஊட்டியில் ஆளுநர் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, துணை வேந்தர்கள் ஒன்றிய அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுபோல் கல்வித்துறையில் ஆளுநர் பல குழப்பங்களை விளைவித்துக் கொண்டே இருந்தார். பல்கலைக் கழங்களில் துணை வேந்தரை நியமிப்பதில் ஆளுநருக்கே அதிக அதிகாரம் இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் பல்கலை வேந்தராக மாநில முதல்வர் இருப்பார் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மேலும் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ைவக்கப்பட்டது. ஆளுநர் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். சிலவற்றை திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இதன் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8ம் தேதி நீதிபதிகள் பார்திவாலா, மகாதேவன் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில், அரசியலமைப்பு சாசனம் 200வது பிரிவின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும்போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. 2வது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா வேறுபட்டால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் உச்ச நீதிமன்றமே முன்வந்து மேற்கண்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் மாநில முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதை பின்பற்றி அரசிதழில் அறிவிக்கப்பட்டு, முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 16ம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் உயர்க்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், பல்கலைக் கழக துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் மாநில முதலமைச்சருக்கு வந்துள்ளது. ஆனால், தமிழக ஆளுநர் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் தனக்கே அதிகாரம் உள்ளது என்ற நோக்கில், வருகிற 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மூன்று நாள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்ற அறிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து துணை வேந்தர்களுக்கும் அழைப்பும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி உள்ள நிலையில் துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்து வரும் தேசியக் கல்விக் கொள்கையை ஆளுநர் மாளிகை மூலம் தமிழகத்தில் செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சி எடுத்துள்ளதாக தெரிகிறது.
மாநில அரசின் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநரே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான தாக்குதல் தளமாக பல்கலைக் கழகங்களை ஆளுநர் திருப்பும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் சட்ட நெருக்கடியை உருவாக்க ஆளுநர் முயன்று வருவதாகவும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. எனவே, இப்போது ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறுவதுமாக இருக்கிறது.
இதன் மூலம், சில மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் போல தமிழகத்திலும் ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறாரா என்ற கேள்விகளையும் அரசியல் கட்சியினர் எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், யார் உத்தரவை ஏற்பது என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். ஆளுநர் கூட்டிய கூட்டத்துக்கு துணைவேந்தர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தி வருவதாகவும் பல்கலைக் கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மாநாடு குறிப்பிட்டபடி நடக்குமா அல்லது வெறும் வெற்றுக் கூட்டமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
The post உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஏற்பாடு செய்துள்ள ஆளுநரின் துணைவேந்தர் மாநாடு அதிகார அத்துமீறலின் உச்சம்: அரசியல் கட்சியினர் எதிர்ப்பு appeared first on Dinakaran.