மும்பை: ‘உத்தவ் சிவசேனா, நவநிர்மான் சேனா கூட்டணி பற்றி தற்போது எந்த அறிவிப்பும் இல்லை’ என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பிளவுபடாத சிவசேனா கட்சியில் ராஜ் தாக்கரே முக்கிய பங்கு வகித்தார். ஆனால் கடந்த 2006ம் ஆண்டு சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உள்பூசல் காரணமாக ராஜ் தாக்கரே வௌியேறி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்ற புதிய கட்சியை தொடங்கினார். தற்போது சிவசேனா கட்சி தலைவராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வருகிறார்.
ராஜ் தாக்கரேவும், உத்தவ் தாக்கரேவும் உறவினர்கள். அரசியல் ரீதியாக இருவரும் பிரிந்திருந்தாலும், அண்மைக்காலமாக குடும்ப நிகழ்வுகளில் இருவரும் கலந்து கொண்டு வருகின்றனர். அத்துடன் அண்மையில் மகாராஷ்டிராவில் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டதற்கு ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இருவரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இணைய இருப்பது ஓரளவு உறுதியாக இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தவ் சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் அளித்த பேட்டியில், “உத்தவ் சிவசேனா, நவநிர்மான் சேனா கூட்டணிக்காக உத்தவ் தாக்கரே எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மகாராஷ்டிராவின் எதிரிகளுடன் கூட்டு சேரக்கூடாது என்று மட்டுமே உத்தவ் தாக்கரே சொன்னார். தற்போது கூட்டணி பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.
* ஷிண்டே டென்ஷன்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று சதாராவில் பேட்டியளித்தார். அப்போது, உத்தவ், ராஜ் தாக்கரே கட்சிகள் நெருங்கி வருவது பற்றி அவரிடம் ஒரு நிருபர் கேட்டார். இதனால் கோபமடைந்த ஷிண்டே, ‘‘பணிகளை பற்றி மட்டுமே பேச வேண்டும்’’ என்று கோபத்துடன் கூறினார்.
சிவசேனா(உத்தவ்) எம்பி சஞ்சய் ராவுத் கூறுகையில், ‘‘இந்த விஷயம் பற்றி கேட்டால் ஷிண்டே கோபப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை. இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்தால் வரவேற்பதாக முதல்வர் பட்நாவிஸ் கூறியுள்ளார். அவர் தன்னுடைய கோபத்தை வெளியில் காட்டவில்லை. ஆனால், மனதுக்குள் அதற்கு எதிரான நிலை இருக்கலாம். பாஜ மகிழ்ச்சி என்றால் அது பொய் செய்தி. இந்த கூட்டணி அமைய கூடாது என்பது தான் பாஜவின் எண்ணம்’’ என்றார்.
The post உணர்ச்சிப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்து வருகிறது உத்தவ் சிவசேனா, எம்என்எஸ் கூட்டணி முடிவாகவில்லை: எம்பி சஞ்சய் ராவத் விளக்கம் appeared first on Dinakaran.