விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோயில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பின்பற்றி இன்று காலை திறக்கப்பட்டு பட்டியல் இன மக்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர தரிசனத்திற்கு பின் கோயில் மூடப்பட்டது.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2023, ஜூன் 7ம் தேதி வருவாய்த் துறையினரால் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட திரெளபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், திரெளபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒரு கால பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் உத்தரவிட்டதன் பேரில், 2024, மார்ச் 22ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, ஒருகால பூஜை நடத்தப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், வருவாய் கோட்டாட்சியரால் போடப்பட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதுதொடர்பான சமாதானக் கூட்டம் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்ச் 21ம் ேததி நடைபெற்றது. சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் கோயிலைத் திறந்து தரிசனம் செய்வதற்கு ஒப்புக் கொண்டனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கோவிலை சுத்தம் செய்து கோவிலின் உள்புறம் அதனை சுற்றி 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏடிஎஸ்பி திருமால் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்க்காக குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டு அர்ச்சகர் அய்யப்பன் வழக்கம்போல் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்தார். தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 6 மணி அளவில் ஊர்வலமாக வந்து திரெளபதி அம்மனை தரிசனம் செய்தனர். காலை 7.45 மணிக்கு கோயில் போலீசார், அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டது. 100 ஆண்டு பழமை வாய்ந்த திரெளபதி அம்மன் கோயிலுக்குள் முதல் முறையாக பட்டியலின மக்கள், சென்று வழிபாடு நடத்தியது மூலம் பட்டியலின மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, 22 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டிற்காக திறக்கப்படும் கோயிலை நல்ல நாள் பார்த்து திறக்காமல், ஏனோ தானோ என்று திறக்க வருவாய்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக கூறி ஊர் தரப்பு மக்கள் இன்று வழிபாடு நடத்த வரவில்லை என்றும், நாளை (வெள்ளிக்கிழமை) கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
The post உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை திறப்பு: முதல் முறையாக பட்டியல் இனமக்கள் சென்று வழிபாடு appeared first on Dinakaran.