சென்னை: வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (நவ.25) காலை 8.30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவ.26) காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.