புதுடெல்லி: உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ கார் தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வரும் ஏப்ரலில் மும்பையில் முதல் விற்பனை மையம் தொடங்கப்படுகிறது. உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ நிறுவனத்தை, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நடத்தி வருகிறார். இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருந்த நிலையில், டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டுவர சிரமமாக இருப்பதாக எலான் மஸ்க் முன்னர் கூறியிருந்தார். இதனிடையே, இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் டெஸ்லா கார்கள் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதாகக் கூறப்பட்டது. அதன்படி ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவின் மும்பையில் தனது முதல் ஷோரூமை திறக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கென மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தின் தரை தளத்தில் 4,000 சதுர அடி கொண்ட இடத்தை டெஸ்லா நிறுவனம் வாடகைக்கு பெற்றுள்ளதாகவும், இந்த ஷோரூமுக்கு மாத வாடகையாக ஒரு சுமார் ரூ. 35 லட்சம் கொடுக்கவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது 2வது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மலிவு விலை கார்களே 35,000 டாலர் (ரூ.30.3 லட்சம்). அதுமட்டுமின்றி சாலை வரி, காப்பீடெல்லாம் சேர்த்து சுமார் ரூ. 35 முதல் 40 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்தியாவில் டெஸ்லா கார்களின் தொடக்க விலை ரூ. 21 லட்சம் ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் டெஸ்லா தனது விற்பனைத் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மும்பையில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா திறக்கும் என்பது உறுதியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் வாகன தொழிலில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் நிலையில், மின்சார வாகன உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த 2022-2023ம் ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஆனால் இவற்றில் 95 சதவீத வாகனங்கள் மூன்று சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களாகும்.
அமெரிக்கா தவிர டெஸ்லாவின் தொழிற்சாலைகள் சீனாவிலும், ஜெர்மனியிலும் இருக்கின்றன. அடுத்து மெக்சிகோவிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவிலும் கார் தொழிற்சாலையை ெதாடங்க எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு எலான் மஸ்க்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனால் டெஸ்லா தொழிற்சாலை இந்தியாவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால்தடம் பதிப்பது உறுதியானால், அதை தங்கள் மாநிலத்துக்கு கொண்டுவர அனைத்து மாநிலங்களும் போட்டிபோடும். எப்படியும் டெஸ்லா கார் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்க எலான் மஸ்கிடமும், பிரதமர் மோடியிடமும் தமிழக அரசு கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்திக்கு அளிக்கப்படும் சலுகைகளையும், மின்சார வாகன தொழிலுக்கு தனி கொள்கை இருப்பதால் ஆந்திராவை காட்டிலும் தமிழ்நாட்டிற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களில் 40 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், திறமையான பணியாளர்கள், கப்பல் தளம், ஆட்டோமொபைல் ஹப்ஸ் அதிகமாக இருப்பது உள்ளிட்ட வசதிகள் என்று கூறப்படுகிறது. மேலும் ஆடம்பர கார் விற்பனையில் தமிழ்நாட்டில் மட்டும் கடந்தாண்டு 19.3% அதிகரித்துள்ளது. எப்படியாகிலும் டெஸ்லா தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டால், அது தமிழ்நாட்டின் மோட்டார் வாகன உற்பத்தி மையமாக இருக்கும் என்று தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
The post உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ கார் தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வருகிறது?: வரும் ஏப்ரலில் மும்பையில் விற்பனை மையம் தொடக்கம் appeared first on Dinakaran.